பலத்த மழையால் தேவாலய தடுப்பு சுவர் இடிந்தது

குன்னூரில் பலத்த மழையால் தேவாலய தடுப்பு சுவர் இடிந்தது. மேலும் மரம் விழுந்து 2 வாகனங்கள் சேதம் அடைந்தன.;

Update: 2021-12-03 14:26 GMT
குன்னூர்

குன்னூரில் பலத்த மழையால் தேவாலய தடுப்பு சுவர் இடிந்தது. மேலும் மரம் விழுந்து 2 வாகனங்கள் சேதம் அடைந்தன.

பலத்த மழை

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அருவங்காடு, வெலிங்டன், பேரக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குன்னூர் ராணுவ பகுதியான எம்.எச். பகுதியில் இருந்த பழமையான கற்பூர மரம் திடீரென்று சரிந்து விழுந்தது. 

இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கபட்டு இருந்த கார் மற்றும் ஜீப் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்டோன்மென்ட் ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் வாகனங்கள் மீது விழுந்த மரத்தை அப்புறபடுத்தினர். பின்னர் சாலையை சீர் செய்தனர். 

தேவாலய தடுப்பு சுவர் இடிந்தது

இதேபோன்று குன்னூர் அருகே மவுண்ட் பிளசன்ட் சகாய மாதா தேவாலயம் உள்ளது. பலத்த மழையால் நேற்று மாலை 6 மணிக்கு ஆலயத்தின் 35 அடி உயர தடுப்பு சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் கார் ஒன்று இடிபாடுகளுக்குள் சிக்கியது. 

இதை அறிந்த குன்னூர் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த ஆண்டும் பலத்த மழையால் ஆலய தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்திலும் தடுப்பு சுவர் இடிந்து விழுகிறது. எனவே மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க இனிவரும் காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்