கோத்தகிரி
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பட்டா மாற்றம் மேற்கொள்ள வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் பட்டா மாற்ற சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சகுந்தலா, கிராம நிர்வாக அலுவலர் சத்யா ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
முகாமில் புல எண் மற்றும் உட்பிரிவில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தால் அதில் திருத்தம் செய்தல், பரப்பளவில் திருத்தம் மேற்கொள்ளுதல், பட்டதாரரின் பெயர், தகப்பனார் பெயர் மற்றும் பாதுகாவலர் பெயர் திருத்தம், உறவு முறையில் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு உத்தரவு நகல் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.