சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது
தொடர் மழை, கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது. மேலும் பொருட்கள் விற்பனை இன்றி வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குன்னூர்
தொடர் மழை, கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது. மேலும் பொருட்கள் விற்பனை இன்றி வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2-ம் கட்ட சீசன்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனால் வணிக ரீதியாக வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பயனடைந்து வந்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒவ்வொரு சீசனுக்கும் பூங்காக்களில் பல்வேறு ரக மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது. தற்போது 2-ம் கட்ட சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. அவற்றை காண தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
வெறிச்சோடிய படகு இல்லம்
ஆனால் கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மழையுடன் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. இது மட்டுமின்றி தொடர் மழை காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது. மேலும் பூங்கா மட்டுமின்றி படகு இல்லத்தில் படகு சவாரி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.
வியாபாரிகள் பாதிப்பு
இதனால் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்து கடைகள் வைத்துள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உள்பட அனைத்து தரப்பு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதேபோன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ந்த காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. மழை குறைந்து வெள்ளம் வடிந்த பின்னர் இயல்புநிலை திரும்பினால் மட்டுமே சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.