பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வெளியில் வர வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இனிவரும் நாட்களில் பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்தே வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டும் என கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-12-03 13:24 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இனிவரும் நாட்களில் பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்தே வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டும், என கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒமைக்ரான் வைரஸ்

கொரோனா தொற்று பரவல் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 1-வது அலையின் போது பல்வேறு கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடித்ததால் நோய் தொற்றின் பாதிப்பு குறைவாகவே இருந்தது. 

2-வது அலையின் போது அதன் வீரியத்தை பொருட்படுத்தாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தோம். 

அதன் விளைவு குடும்ப உறுப்பினர், உறவினர், நண்பர், உடன் பணிபுரிந்தவர் என யாரோ ஒருவரை இழக்கும் நிலைக்கு சென்றோம். 

நமக்கு தெரியாமலே நாம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் பிறருக்கு நோய் தொற்று ஏற்படவும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படவும் காரணமாக கூட இருந்திருக்கலாம். அதை, நாம் எளிதாக கருதிவிட கூடாது.

தற்போது வெளிநாடுகளில், ‘ஒமைக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. எனவே நாம் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல், இரண்டு டோஷ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.

முக கவசம் அணிய வேண்டும்

மேலும் தேவையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், இறப்பு போன்ற நிகழ்வுகளில் குறைந்தளவு மக்கள் சமூக இடைவெளியுடன் கூடுவதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். நமக்கு வராது என்ற அலட்சியப்போக்கில் இருக்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் காப்பது அரசுக்கு மட்டுமான கடமை மட்டும் அல்ல. பொதுமக்களுக்குமான கடமையாகும். 

தற்போது 20 சதவீதத்திற்கும் குறைவான பொதுமக்கள் மட்டுமே முகக் கவசம் அணிந்து இருப்பதால் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இனிவரும் நாட்களில் பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்தே வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டும்.

தடுப்பூசி 

எனவே நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு நமது மாவட்டத்தில் அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் கடமையினை முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல், தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் போன்றவற்றை பின்பற்றுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்