பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

திண்டிவனம் அருகே நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் கற்களை வீசி தாக்கியதில் பஸ் கண்ணாடி உடைந்தது.;

Update: 2021-12-03 12:28 GMT
மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து நல்லாமூருக்கு தினமும் காலையில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்றும் அரசு பஸ், நல்லாமூருக்கு இயக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, மீண்டும் அந்த பஸ் திண்டிவனத்திற்கு புறப்பட்டது. திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராமத்தை சேர்ந்த சிலர் நின்றுகொண்டு, பஸ்சை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். ஆனால் டிரைவரோ பஸ்சை நிறுத்தாமல் சென்றார். 

கண்ணாடி உடைப்பு 

உடனே பள்ளி மாணவ-மாணவிகள், பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். இருப்பினும் டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், சாலையோரத்தில் கிடந்த கற்களை எடுத்து பஸ் மீது சரமாரியாக வீசினர். 
இதில் பஸ்சின் பின்பகுதியில் உள்ள கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், பஸ்சை நிறுத்தினார். அப்போது ஏற்கனவே பஸ்சில் இருந்த பயணிகள் அலறி, அடித்துக்கொண்டு கீழே இறங்கினர். 
போலீசார் விசாரணை 
இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் விரைந்து வந்து, பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த மாணவர்களின் பெற்றோர், பஸ் கண்ணாடிக்கான தொகையை செலுத்திவிடுவதாக கூறினர். 
இதையடுத்து அரசு பஸ் அங்கிருந்து திண்டிவனத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்