இன்று, 8, 10-ந் தேதிகளில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்

கணினி பட்டா திருத்த முகாம் இன்று, 8 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-12-03 11:38 GMT
காஞ்சீபுரம்,

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டவாறு அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தி பட்டா தொடர்பான தமிழ்நிலம் மென்பொருளில் ஏற்பட்டுள்ள கணினி பிழைகளை முகாம்களிலேயே திருத்தம் மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வருகிற 8, 10-ந்தேதிகளில் அந்தந்த வட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

எனவே இந்த முகாம்களில் பொதுமக்கள் பயன்படுத்திகொண்டு, தங்கள் பட்டாக்களில் உள்ள கணினி திருத்தம் தொடர்பான பிழைகளை திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

காஞ்சீபுரம் வட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) திருப்புக்குழி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், 8-ந் தேதி (புதன்கிழமை) அன்று கூரம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிறுகாவேரிபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் கணினி திருத்த முகாம்கள் நடைபெற உள்ளது.

உத்திரமேரூர் வட்டத்தில் இன்று இ-சேவை மையம், பென்னலூர் கிராமத்திலும், 8-ந்தேதி கிராம இ-சேவை மையம் அத்தியூர் மேல்/தூளி கிராமத்திலும், 10-ந்தேதி நூலக கட்டிடம் காவனூர் புதுச்சேரி கிராமத்திலும் கணினி திருத்த முகாம்கள் நடைபெற உள்ளது.

வாலாஜாபாத் வட்டத்தில் இன்று மாகரல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், 8-ந்தேதி கிராம இ-சேவை மைய கட்டிடம் வாரணவாசி கிராமத்திலும், 10-ந்தேதி வி.பி.ஆர்.சி கட்டிடம் வில்லிவலம் கிராமத்திலும் கணினி திருத்த முகாம்கள் நடைபெற உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம், 3-ந் தேதி கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் 8-ந்தேதி தண்டலம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு அலுவலகத்திலும், 10-ந்தேதி இருங்காட்டுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கணினி திருத்த முகாம்கள் நடைபெற உள்ளது.

குன்றத்தூர் வட்டத்தில் 3-ந்தேதி மவுலிவாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், 8-ந்தேதி செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு அலுவலகத்திலும், 10-ந்தேதி வரதராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கணினி திருத்த முகாம்கள் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்