கன்னிகைப்பேர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் ஏரி உபரிநீர் - போக்குவரத்து பாதிப்பு
கன்னிகைப்பேர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் ஏரி உபரி நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.;
பெரியபாளையம்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் கனமழையால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பியதால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி நிரம்பியதால் உபரிநீர் கலங்கல் வழியாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், பெரியபாளையம்- கன்னிகைப்பேர் நெடுஞ்சாலை மதுரவாசல் பஸ் நிறுத்தம் அருகே இருந்து கன்னிகைப்பேர் ஏரிக்கரை வளைவு வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் தண்ணீர் பாய்ந்து செல்வதால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகின்றனர்.