‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-03 07:35 GMT
மின்வாரியத்தின் மின்னல் வேக நடவடிக்கை



திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த திருமழிசை பஜனைக்கோவில் தெரு பிராயம்பத்து காலனியில் உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் நேற்று செய்தி வெளியானது. இதனையடுத்து மின்னல் வேக நடவடிக்கையாக மின்வாரிய ஊழியர்கள் இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைத்து தந்துள்ளனர்.

உடனடி தீர்வால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை அயனாவரம் முத்தம்மன் கோவில் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் மின்வயர்கள் ஆபத்தான முறையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது பற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று படத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது. இப்புகார் மீது மின்வாரியம் உடனடி தீர்வு கண்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாலையில் விபத்தை உண்டாக்கும் பள்ளங்கள்

சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இரு பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி விபத்து நடப்பது வாடிக்கையாகவே இருக்கிறது. இந்த பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் தேவையற்ற விபத்துகள் தவிர்க்கப்படும். வாகன ஓட்டிகளின் வேதனையும் தீரும்.

- சமூக ஆர்வலர், திருவல்லிக்கேணி.

கால்வாய் மூடி சீரமைக்கப்படுமா?



சென்னை பழைய வண்ணாரப்பேட்டை 48-வது வார்டுக்குட்பட்ட ஆண்டியப்பன் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மூடி உடைந்து இருக்கிறது. அருகிலேயே ஒரு தொடக்கப்பள்ளியும் இருக்கிறது. எனவே மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி இந்த கால்வாய் மூடியை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- சமூக ஆர்வலர்கள், ராயபுரம்.

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை பெரம்பூர் பி.பி.ரோடு பாரத் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள மின் இணைப்பு பெட்டியின் கதவு திறந்த நிலையில் இருக்கிறது. வயர்களும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. மழைக்காலம் என்பதால் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மின் இணைப்பு பெட்டியை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- பொதுமக்கள், பெரம்பூர்.

வாகன ஓட்டிகள் அவதி

சென்னை ராயப்பேட்டை பைகிராப்ட்ஸ் சாலையில் பாதாள சாக்கடை மூடி சேதம் அடைந்திருக்கிறது. இதனால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகிறார்கள். அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், ராயப்பேட்டை.

சிமெண்ட் சாலையில் பள்ளம்



காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் சன்னதி கோவில் தெருவில் பாண்ட பெருமாள் கோவில் திரும்பும் வழியில் சிமெண்ட் சாலை சேதம் அடைந்து பெரிய பள்ளமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் தடுமாறி கிழே விழும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன. எனவே வாகன ஓட்டிகளை இன்னல்களை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பக்தர்கள்.

தெருக்களுக்கு பெயர் பலகை வேண்டும்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் வெள்ளவேடு அருகே மேல்மணம்பேடு, முத்துநகர், பாலாஜி நகர், மீனாட்சி நகர், மோதிரம்பேடு மற்றும் சீனிவாசா நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. ஆனால் எந்த தெருவுக்கும் பெயர் பலகைகள் இல்லை. இதனால் இந்த பகுதிகளுக்கு புதிதாக வருவோர்கள் குழப்பம் அடையும் நிலை இருக்கிறது.

- பொதுமக்கள்.

பள்ளிக்கூடம் அருகே சேறு-சகதி

செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி நுழைவு வாசல் எதிரில் சேறும், சகதியுமாக உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளி குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே செல்கிறார்கள். எனவே பள்ளி குழந்தைகளின் சிரமத்தை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பெற்றோர்கள்.

மழையால் இடிந்து விழுந்த தடுப்பு சுவர்



திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செக்டார்-2 பிளாக் 6-ல் தனியார் பள்ளி அருகில் உள்ள மழைநீர் கால்வாயின் ஒரு பக்க தடுப்பு சுவர் பெருமழை காரணமாக இடிந்து விழுந்துவிட்டது. இந்த தரைப்பாலத்தின் வழியாகத்தான் கன்னிகாபுரம் மற்றும் சுற்றுபுற மக்கள், பள்ளி மாணவர்கள் பெருமளவில் அச்சத்துடன் கடந்து வருகின்றனர். உயிர் சேதம் ஏற்படும் முன்பாக உடனடியாக தடுப்புசுவர் அல்லது பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஏ.தரணிதரன், சமூக ஆர்வலர்.

மேலும் செய்திகள்