வேலூர் கோட்டை அகழிநீர் வெளியேறும் கால்வாய் அடைப்பு நவீன கேமரா மூலம் கண்டுபிடிப்பு

நவீன கேமரா மூலம் வேலூர் கோட்டை அகழிநீர் வெளியேறும் கால்வாய் அடைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2021-12-03 05:57 GMT
வேலூர்

நவீன கேமரா மூலம் வேலூர் கோட்டை அகழிநீர் வெளியேறும் கால்வாய் அடைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணிகளை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கோவிலுக்குள் தண்ணீர்

வேலூர் கோட்டை அகழியில் கடந்த மாதம் 12-ந் தேதி தொடர்மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து அபிஷேகநீர் வெளியே செல்லும் வழியாக அகழி தண்ணீர் கோவிலுக்குள் புகுந்து கோவில் வளாகத்தில் குளம்போன்று தண்ணீர் தேங்கியது. கடந்த மாதம் 29-ந் தேதி கோவில் அம்மன் கருவறைக்குள் தண்ணீர் தேங்கியது.

அதைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. உற்சவர் மற்றும் அம்மன் கோவில் ராஜகோபுரத்திற்கு வெளியே நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு சாமியை தரிசனம் செய்து வருகிறார்கள்.

கால்வாய் தூர்வாரும் பணி

வேலூர் கோட்டை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது அகழி உபரிநீர் பாலாற்றுடன் கலக்கும் வகையில் மதகுகளுடன் கூடிய கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் வேலூர்-பெங்களூரு சாலையின் அடியில் கடந்து புதிய மீன்மார்க்கெட் அருகே உள்ள கால்வாய் வழியாக நிக்கல்சன் கால்வாயுடன் இணைந்து பாலாற்றுக்கு செல்கிறது.

இந்த கால்வாய் பராமரிக்கப்படாததால் அகழி உபரிநீர் தற்போது வெளியேறவில்லை. கோட்டை அகழி உபரிநீர் வெளியேறும் கால்வாய் நேற்று முன்தினம் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. மீன்மார்க்கெட் அருகே உள்ள கால்வாய் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டது. ஆனாலும் அகழியில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை. அகழியின் ஒருபகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அந்த இடம் சரியாக தெரியவில்லை.

நவீன கேமரா மூலம் ஆய்வு

இந்த நிலையில் நேற்று காலை அகழியில் எந்த இடத்தில் கால்வாய் அடைப்பு உள்ளது என்பதை நவீன கேமரா மூலம் கண்டறியும் பணி நடந்தது. இதற்காக சிறிய அளவிலான நவீன கேமரா தண்ணீருக்குள் செலுத்தப்பட்டு, கால்வாயின் மதகுகள் மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள் டி.வி.யில் பதிவு செய்யப்பட்டன. அவற்றை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டார்.

 அப்போது இந்திய தொல்லியல்துறை வேலூர் கோட்ட முதுநிலை பராமரிப்பு அலுவலர் வரதராஜ் சுரேஷ், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

 இதற்கிடையே கோட்டை அகழியில் நடந்துவரும் பணிகளை ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், புதிய மீன்மார்க்கெட் அருகே கால்வாய் தூர்வாரிய இடத்தில் தற்போது சிறிதளவு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த தண்ணீர் அகழியில் இருந்து வருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். மீன்மார்க்கெட் கால்வாய் பகுதியில் இருந்து அகழிநீர் வெளியேறும் பகுதியில் நவீன எந்திரங்களால் காற்று மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது.  மேலும் சாலையின் ஒரு பகுதி தோண்டப்பட்டு கால்வாய் கண்டறியும்பணி நடைபெற்றது. அகழியில் இருந்து தண்ணீரை விரைவில் வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்