காய்கறிகள் கொள்முதல் குறித்து கேரளா - தென்காசி வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
கேரளா - தென்காசி வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
தென்காசி:
தென்காசியில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று கேரள மாநில வேளாண் அதிகாரிகள், தென்காசி மாவட்ட வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி பகுதி வேளாண் அலுவலர் சிவராமகிருஷ்ணன், கேரள மாநில வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் காய்கறி உற்பத்தி மற்றும் விற்பனை மைய நிர்வாக இயக்குனர் ஜே.சஜீவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு காய்கறிகளை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து வேளாண் துறை மூலம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது.
காய்கறி உற்பத்தி மற்றும் விற்பனை அங்காடி மூலம் கேரள மாநில மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் வழங்கும் வண்ணம் அந்த மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல்கட்ட முயற்சியாக இடைத்தரகர்களை தவிர்த்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள் கொள்முதல் செய்வதற்கான முயற்சியாக இந்த கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 6 உழவர் குழுக்களில் அங்கம் வகிக்கும் 6 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு தென்காசி தினசரி சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு விவசாய சங்கங்களுக்கு எவ்வளவு கமிஷன் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.
தென்காசி மாவட்டத்திலிருந்து முதற்கட்டமாக ஆலப்புழா, பத்தனம்திட்டா மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு காய்கறிகள் வினியோகிக்கப்படும் என்றும், மற்ற தென் மாநிலங்களிலும் காய்கறி கொள்முதல் செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.