குமரியில் பெண் அதிகாரி வீடு உள்பட 2 இடங்களில் கொள்ளையடித்தது அம்பலம்
தஞ்சையில் கைதான 4 பேைர காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் குமரியில் பெண் அதிகாரி வீடு உள்பட 2 இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
மேலகிருஷ்ணன்புதூர்:
தஞ்சையில் கைதான 4 பேைர காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் குமரியில் பெண் அதிகாரி வீடு உள்பட 2 இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
கொள்ளையர்கள் சிக்கினர்
தஞ்சையில் மேலவஸ்தா சாவடி பகுதியில் கடந்த மாதம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பிரபல கொள்ளையர்களான சேலம் ஓமலூரை சேர்ந்த மனோஜ் (வயது 35), சிவகங்கை மாவட்டம் கீழடியை சேர்ந்த கண்ணன் மகன்கள் கார்த்திக் ராஜா (24), ராஜா ராமன் (26), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சூர்யா நகரை சேர்ந்த திலீப் திவாகர் (26) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த கொள்ளையர்கள் 4 பேரும் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
காவலில் எடுத்து விசாரணை
இதனை தொடர்ந்து சுசீந்திரம் போலீஸ் சார்பில் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதாவது, தஞ்சையில் கைதான கொள்ளையர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதற்கு நீதிபதி சிவகுமார், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். பின்னர் 4 பேரையும் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் போலீஸ் காவலில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதிகாரி வீட்டில் திருடியது அம்பலம்
இதில் பறக்கை சோதிரி நகரை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் சூப்பிரண்டு கலா (57) என்பவர் வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 18¼ பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் கொள்ளையடித்த வழக்கில் இவர்கள் 4 பேருக்கும் தொடர்பு இருந்தது அம்பலமானது.
இதேபோல் அதே மாதம் சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ரமம் சாஸ்தான் கோவில் தெருவை சேர்ந்த கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் பத்மநாபன் பிள்ளை (31) என்பவர் வீட்டில் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றதும், சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஆசாத் நகரை சேர்ந்த வசந்தா என்பவருடைய வீடு புகுந்து திருடிய போது நகை, பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதும் தெரிய வந்தது.
மீண்டும் சிறையில் அடைப்பு
இந்த கொள்ளையர்கள் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடுவதை தான் வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் கொள்ளையடித்த பணத்தை சேமித்து வைத்து பெரிய தொழில் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு கைவரிசை காட்டி வந்த நிலையில் தஞ்சை போலீசில் இவர்கள் சிக்கியதாக சுசீந்திரம் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் சுசீந்திரம் பகுதியில் திருடியதாக அவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. பின்னர் 4 பேரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.