ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி; புதிதாக 65 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியானாா்கள். புதிதாக 65 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-12-02 21:11 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 560 பேருக்கு பரிசோதனை செய்ததில் 64 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 440 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 954 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 55 வயது பெண் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த மாதம் 30-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 71 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 698 ஆக உயர்ந்தது. மேலும் தற்போது தொற்று உள்ள 788 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்