வாலிபரை கொன்று உடலை புதைத்த 2 பேர் கைது

உன்சூருவில், மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகித்து தகராறு செய்த வாலிபரை கொன்று உடலை புதைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-02 21:05 GMT
மைசூரு: உன்சூருவில், மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகித்து தகராறு செய்த வாலிபரை கொன்று உடலை புதைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

 மனைவியுடன் கள்ளத்தொடர்பு...

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பி.பி.சி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணா(வயது 35). இவரது மனைவி மல்லிகா. இதபோல் அதேப்பகுதியை சேர்ந்தவர் கோபால். இந்த நிலையில் கிருஷ்ணாவின் மனைவி மல்லிகா, கோபாலிடம் சிரித்து பேசி வந்ததாக தெரிகிறது. 

இதனால் கிருஷ்ணா தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்து கோபாலிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
அதன்படி கடந்த 27-ந்தேதி அன்றும் கிருஷ்ணா, கோபாலிடம் தகராறு செய்துள்ளார். இதற்கிடையே அதேதினத்தில் கிருஷ்ணா திடீர் மாயமாகிவிட்டார். 

2 நாட்களுக்கு மேலாகியும் கிருஷ்ணா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணாவின் மனைவி மல்லிகா, உன்சூர் புறநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவருக்கும், கோபாலுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. அதனால் கணவர் மாயமாகி இருப்பதில் கோபால் மீது சந்தேகம் உள்ளது என்றார். 

வாலிபரை கொன்று உடல் புதைப்பு

இதையடுத்து உன்சூர் போலீசார், சந்தேகத்தின் பேரில் கோபாலை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், கோபாலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கிருஷ்ணா, தனது மனைவியுடன் கள்ளதொடர்பு இருப்பதாக சந்தேகித்து கோபாலிடம் தகராறு செய்துள்ளார். 

அதன்படி சம்பவத்துன்று தகராறு செய்த போது ஆத்திரமடைந்த கோபால், தனது நண்பன் அசோக்குடன் சேர்த்து கிருஷ்ணாவை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையான கிருஷ்ணாவின் உடலை 2 பேரும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு எடு்த்து சென்று அங்கு குழித்தோண்டி புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வந்தது தெரியவந்தது. 

2 பேர் கைது

இதையடுத்து கோபாலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் அசோக்கையும் கைது செய்தனர். இதைதொடர்ந்து போலீசார், 2 பேரையும் கிருஷ்ணாவை கொலை செய்து புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்க வைத்து குழித்தோண்டி உடலை வெளியே எடுத்தனர். பின்னர் கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.ஆர்.ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  

இதுகுறித்து 2 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் மல்லிகாவுக்கு எதேனும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்