ஈரோட்டில் மாநாடு திரைப்படம் ஓடிய சினிமா தியேட்டருக்கு உரிமம் புதுப்பிக்காததால் சீல் வைப்பு; ஆர்.டி.ஓ. பிரேமலதா நடவடிக்கை
ஈரோட்டில் மாநாடு திரைப்படம் ஓடிய சினிமா தியேட்டருக்கு உரிமம் புதுப்பிக்கப்படாததால் ஆர்.டி.ஓ. பிரேமலதா சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
ஈரோடு
ஈரோட்டில் மாநாடு திரைப்படம் ஓடிய சினிமா தியேட்டருக்கு உரிமம் புதுப்பிக்கப்படாததால் ஆர்.டி.ஓ. பிரேமலதா சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
மாநாடு திரைப்படம்
ஈரோடு மாநகர், மேட்டூர் ரோட்டில் வி.எஸ்.பி. தியேட்டர் இயங்கி வருகிறது. இந்த தியேட்டரில் நடிகர் சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் திரையிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா தலைமையில் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் தியேட்டருக்கு வந்தனர். அங்கு தியேட்டர் உள் அரங்கம் பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அலுவலகத்துக்கு சென்று படம் திரையிடுவதற்கான உரிமத்தை சோதனை செய்தனர்.
தியேட்டருக்கு சீல்
அப்போது கொரோனா ஊரடங்குக்கு பின்னர் இந்த தியேட்டரின் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்ததும், உரிமம் இல்லாமல் சினிமா திரையிட்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தியேட்டரின் காட்சிகளை ரத்து செய்ய ஆர்.டி.ஓ. பிரேமலதா உத்தரவிட்டார். மேலும், உரிமம் இல்லாமல் தியேட்டரை இயக்கிய குற்றத்துக்காக தியேட்டரை மூடி முத்திரை (சீல்) வைக்க உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் தியேட்டரை மூடி சீல் வைத்தனர்.
புகார்
இதுபற்றி ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா கூறியதாவது:-
சினிமா தியேட்டர்கள் முறையாக இயங்க ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்க வேண்டும். இதற்காக சி-படிவம் வழங்கப்பட்டு உரிமம் புதுப்பிக்கப்படும். சில நேரங்களில் சி-படிவம் பெற உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் பெறுவதற்காக ஒரு மாதம் செல்லு படியாகும் இ-படிவம் மூலம் உரிமம் நீட்டிப்பு செய்வது வழக்கம். தொடர்ச்சியாக 3 முறை இ-படிவம் வழங்கவும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த தியேட்டரில் சி-படிவம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததுடன், இ-படிவமும் பெற விண்ணப்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு பிறகு பல திரையரங்குகளில் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்ற புகார்கள் வந்ததன் பேரில் அனைத்து தியேட்டர்களிலும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
அபராதம்
அதன்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின்பேரில் ஈரோட்டில் தியேட்டர்களில் சோதனை நடந்து வருகிறது. அவ்வாறு சோதனையின்போது இந்த தியேட்டரில் உரிமம் புதுப்பிக்கப்படாமலேயே சினிமா திரையிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே தியேட்டர் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான அறிக்கை ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தியேட்டருக்கு அபராதம் விதிக்கப்படும். அபராத தொகை செலுத்திவிட்டு, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து உரிமம் புதுப்பிக்கப்பட்ட சான்று பெற்ற பிறகு தியேட்டர் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
இதுபோல் அனைத்து தியேட்டர்களிலும் சோதனை நடைபெறும். இவ்வாறு ஆர்.டி.ஓ. பிரேமலதா கூறினார்.