தொழில் முனைவோருக்கு விரைவாக கடன் -அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவு

தாட்கோ மூலம் தொழில் முனைவோருக்கு விரைவாக கடன் வழங்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-12-02 20:57 GMT
மதுரை, 

தாட்கோ மூலம் தொழில் முனைவோருக்கு விரைவாக கடன் வழங்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையர் மதுமதி, மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ராகுல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரியகலா கலாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழில் முனைவோர்

கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-
பள்ளிகள் திறக்கப்பட்டு 3 மாதமாக நடைபெற்று வரும் நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பள்ளிக்கட்டிடங்கள் கட்டுவதற்கும், பள்ளி நுழைவு வாயில் அமைப்பதற்கும் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் இலவச வீட்டுமனைப்பட்டா, பழங்குடியினர் சான்று, நலவாரிய அட்டை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை கூடுதல் கவனம் செலுத்தி பயனாளிகள் தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். நலவாரிய அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கு பயனாளிகள் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் அடிப்படையிலும், மனுதாரரை நேரடியாக விசாரணை செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கறவை மாடு, ஆடு வளர்ப்பு, சரக்கு வண்டி, ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட நலத்திட்டங்களை உரியவர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும். அதிகாரிகள், தாட்கோ மூலம் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் கடனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். 
முன்னதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 108 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்