அம்மாபேட்டை பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்பட அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை

சேலம் அம்மாபேட்டை பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்பட அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்தனர்.

Update: 2021-12-02 20:46 GMT
சேலம்,
குறைகள் கேட்பு
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 9 மற்றும் 10-வது வார்டுகளில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். 
அப்போது, சக்தி நகர், 4-வது குறுக்கு தெரு, தாண்டவன் தெரு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் புகுந்து விடுவதாகவும், குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்ற மழைநீர் மற்றும் கழிவுநீரை தடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அப்பகுதியை நேரில் பார்வையிட்டு அதற்கான வழிவகை செய்து தரப்படும் என தெரிவித்தனர்.
சாக்கடை கால்வாய்
10-வது வார்டில் அண்ணா நகர் 4-வது தெருவில் சாக்கடை கால்வாய் அமைத்து தரப்படும் என்றும், பெருமாள் கோவில் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பில் 300 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்தும், வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படும். 10-வது வார்டு வடக்கு வன்னியர் தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். அப்பகுதியில் தெரு விளக்கு அமைத்து தருவதோடு ஆழ்குழாய் கிணறு அமைத்து தரப்படும் எனவும், பழுதடைந்துள்ள மோட்டார்களை பழுது நீக்கம் செய்து தருவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகிேயார் பொதுமக்களிடம் கூறினார்கள்.
கோரிக்கைகள் நிறைவேற்றம்
தொடர்ந்து வீராணம் பிரதான சாலை மன்னார் கோவில் பிரிவில் வெங்கடாஜலம் காலனி, மாதா கோவில் தெரு, லட்சுமணசாமி கோவில் தேவஸ்தானம் அருகில் உள்ள தெரு ஆகிய இடங்களில் ரூ.60 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைத்து வடிகால் வசதி ஏற்படுத்தவும், முத்துக்கவுண்டன் தெரு, ஏரி கொடி தெரு, பாரதியார் நகர், வள்ளுவர் காலனி, தாதாம்பட்டி பிரிவு நேரு நகர், அல்லிக்குட்டை, எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையாளர் சித்ரா, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் பாலு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
கான்கிரீட் சாலை
இதே போன்று மாநகராட்சிக்குட்பட்ட செவ்வாய்பேட்டை பங்களா தெரு, மாணிக்கம் பிள்ளை தெரு, ஏ.வி.அய்யர் தெரு, தாண்டவன் தெரு உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் அப்பகுதி மக்களை சந்தித்து குறைகள் கேட்டனர். அப்போது அந்த பகுதியில் பல இடங்களில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
தொடர்ந்து பங்களா தெருவில் உள்ள பார்வைத்திறன் குறைபாடு உள்ளோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தி அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

மேலும் செய்திகள்