தர்மபுரி, டிச.3-
தொப்பூர் மலைப்பாதையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 950 விபத்துக்களில் 223 பேர் பலியாகி உள்ளனர் என்று அந்தப்பகுதியில் நேரில் ஆய்வு நடத்திய போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் நடராஜன் கூறினார்.
சவாலான பயணம்
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுப்பது குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் நடராஜன் நேற்று அந்த பகுதியில் நேரில் ஆய்வு நடத்தினார்.
இதைத் தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலையில் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்- அமைச்சர் விபத்தில்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை கண்டறிந்து அவற்றை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் அதிக விபத்து ஏற்படக்கூடிய தொப்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி உள்ளேன்.
தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 6 கி.மீ. நீளத்திற்கு தொப்பூர் மலைப்பாதை உள்ளது. இதில் கட்டமேடு முதல் போலீஸ் சோதனை சாவடி வரை சுமார் 3 கி.மீ.சாலை மிக சரிவாகவும், வளைவாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலான பயணமாக இருக்கிறது. இதனால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது.
223 பேர் பலி
தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு விபத்தை தடுக்க 30 கி.மீ. வேகத்தில் 2-வது கியரில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விபத்துக்குள்ளாகும் வாகனங்களை மீட்க 40 மெட்ரிக் டன் எடை கொண்ட கிரேன் கருவியை அந்த பகுதியில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தொப்பூர் மலைப்பாதையில் கடந்த 10 ஆண்டுகளில் 950 விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. இதில் 223 பேர் பலியாகி உள்ளனர். இந்தப் பகுதிகளில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்துகள் ஏற்படுவது கண்டறியப்பட்டு 100 சோலார் மின் விளக்குகளும் 2 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகளில் சோலார் மின் விளக்குகள் அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.472 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு
தொப்பூர் மலைப்பாதையில் கடந்த 5 மாதங்களில் அதிவேகமாக இயக்கப்பட்ட 4.472 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.23.94 லட்சம் மின்னணு முறையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வாகனங்களை கண்காணிக்க 24 மணிநேரமும் இயங்கும் தானியங்கி கேமராக்களை பொருத்துவதற்கான முன்மொழிவினை துறை அலுவலர்கள் உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், உதவி கலெக்டர் சித்ரா விஜயன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் குலோத்துங்கன், போக்குவரத்து துறை சேலம் சரக ஆணையர் பிரபாகரன், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், சுங்கச்சாவடி மேலாளர் நரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.