தேன்கனிக்கோட்டை, டிச.3-
பணிக்கு வராமல் வருகை பதிவேட்டை முறைகேடாக பயன்படுத்திய சத்துணவு மைய அமைப்பாளரை தற்காலிக பணி இடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆணைய உறுப்பினர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா மஞ்சுகொண்டப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை பார்வையிட்டார். அந்த நேரம் சத்துணவு மையத்தில் இருக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் பொருட்கள் இல்லை. இது தொடர்பாக அவர் பள்ளியின் தலைமை ஆசிரியர், சத்துணவு மைய உதவியாளரிடம் விசாரணை நடத்தினார்.
பணியிடை நீக்கம்
அதில் சத்துணவு அமைப்பாளர் சவிதா என்பவர் பணிக்கு வராமல் இருந்ததும், பணியாற்றுவதை போல வருகை பதிவேடடை முறைகேடாக பயன்படுத்தியதும், சத்துணவு மைய அரிசி, பருப்பு, முட்டை போன்ற உணவு பொருட்களை வீட்டில் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் கலெக்டரிடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையை தொடர்ந்து மஞ்சு கொண்டப்பள்ளி ஊரர்டசி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் சவிதாவை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டார். இதே போல புகாரின் பேரில் அஞ்செட்டி தாலுகா பெல்பட்னி சத்துணவு அமைப்பாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.