ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது;

Update: 2021-12-02 20:22 GMT

பென்னாகரம், டிச.3-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
பருவமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளிலும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நீர்வரத்து குறைந்தது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து நேற்று முன்தினம் 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தற்போது நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து மாமரத்துகடவு மற்றும் கோத்திகல் பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்