ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்: பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்
ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம்,
கோவில்களில் தரிசனம்
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சேலம் வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது மகன், மருமகளுடன் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் கோவிலின் முன் மண்டபத்தில் தூண்களில் உள்ள சிலைகளை பற்றி கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் செல்வகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் பொன் பழனிசாமி, செயலாளர் பிரபாகரன், பார்வையாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர் குண்டுக்கல்லூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
அதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்திய சாமி கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பூசி
புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசியை போட்டவர்கள் 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வைரஸ் வகையில் மாற்றம் இருந்தாலும் பாதுகாப்பு முறை ஒன்று தான்.
ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடித்தால் ஒமைக்ரான் புதிய வைரஸ் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.