கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவில் குளம் நிரம்பியது

தொடர் மழையால் கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவில் குளம் நிரம்பியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-12-02 20:06 GMT
கும்பகோணம்:
தொடர் மழையால் கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவில் குளம் நிரம்பியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
பாணபுரீஸ்வரர் கோவில் 
கும்பகோணம் அருகே உள்ள பாணாதுறை பகுதியில் பிரசித்தி பெற்ற பாணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பாணதீர்த்தம் என அழைக்கப்படும் தீர்த்த குளம் அமைந்துள்ளது.
இந்த குளம் கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிதி பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதனை கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு காணொலி காட்சி மூலம்  திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து ஒரு சில மாதங்களில் குளம் வறண்டு காணப்பட்டது. 
குளம் நிரம்பியது 
கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து பாணபுரீஸ்வரர் கோவில் குளத்திலும் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதுகுறித்து பாணாதுறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பாணபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இந்த குளம் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த குளம் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆனால் முறையாக பராமரிக்கப்படாததால் மீண்டும் குளம் வறண்டு காணப்பட்டது. தற்போது பெய்த கனமழை காரணமாக குளத்தில் தண்ணீர் முழுவதும் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே குளத்தில் தண்ணீர் வற்றாமல் பாதுகாக்க வேண்டும். இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்