மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘ஒமைக்ரான்' வைரசுக்கு சிகிச்சை அளிக்க புதிய வார்டு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் வைரசுக்கு சிகிச்சை அளிக்க புதிய வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் வைரசுக்கு சிகிச்சை அளிக்க புதிய வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ்
ஒமைக்ரான் என்று அழைக்கப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன் எதிரொலியாக மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இதுபோல், எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தும் தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி அருகே செயல்பட்டு வரும் கொரோனா வார்டு எதிரே ஒமைக்ரான் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ கருவிகளும், படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டத்தில் முதல் முறையாக மதுரையில் புதிதாக வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அந்த வார்டில், அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது போல், அனைத்து விதமான கருவிகளும் உள்ளது. தற்போது அங்கு 30 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில்...
விமான நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனையில் "பாசிட்டிவ்" என வரும் நபர்களுக்கு, இந்த வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன், புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களை இணைத்து சிகிச்சை அளிக்க முடியாது. அதன் காரணமாகவே புதிதாக வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதற்கான பணியாளர்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்திற்கு வரக்கூடாது என்று தான் வேண்டி கொள்கிறோம். இருந்தாலும், அதனை எதிர்கொள்ளவும் மருத்துவத்துறை தயார் நிலையில் இருக்கிறது. அதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறோம். பொதுமக்கள் எந்த ஒரு புதிய வைரசில் இருந்தும் தப்பிக்க தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுபோல், பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும்" என்றனர்.