விதி மீறிய வணிக கட்டிடங்களுக்கு அபராத தொகை அதிகரிப்பு-மாநகராட்சி அறிவிப்பு
விதி மீறிய வணிக கட்டிடங்களுக்கு அபராத தொகை அதிகரிக்கப்படுகிறது என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது.
மதுரை,
விதி மீறிய வணிக கட்டிடங்களுக்கு அபராத தொகை அதிகரிக்கப்படுகிறது என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சொத்து வரி
மதுரை மாநகரில் உள்ள குடியிருப்பு, வணிக வளாகங்கள், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு மாநகராட்சி சொத்து வரி வசூலிக்கிறது. இந்த சொத்து வரி, கட்டிட வரைப்பட அனுமதி வழங்கப்பட்ட அளவின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஏராளமானோர் வரைப்பட அனுமதியில் உள்ள அளவை விட கூடுதல் அளவிற்கு கட்டிடங்கள் கட்டி விடுகின்றனர். இது போன்று கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அபராத தொகை விதிக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரைப்பட அனுமதியை விட கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அதற்கு சதுரடிக்கு ரூ.50 பைசா வசூலிக்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக ஒரு கட்டிடம் 500 சதுரடியில் கட்டுவதற்கு வரைப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்டிடம் 1000 அடியில் கட்டப்பட்டு உள்ளது. எனவே கூடுதலாக உள்ள 500 சதுரடிக்கு அபராதமாக சதுரடிக்கு 50 பைசா வீதம் ரூ.250 அரையாண்டிற்கு சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த அபராத தொகையை வணிக கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகரித்து உள்ளது.
வணிக கட்டிடங்கள்
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் விதி மீறல் உள்ள இனங்களில் சொத்துவரி விதிப்பு செய்யும் பொழுது ஒரு சதுர அடிக்கு 50 பைசா வீதம் அபராதத் தொகை கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் சொத்துவரி உடன் சேர்த்து அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதனை தற்போது வணிக கட்டிடங்களுக்கு மட்டும் ஒரு சதுர அடிக்கு ரூ.1- என உயர்த்தி அபராதம் விதிக்கவும், பிற கட்டிடங்களுக்கு ஏற்கனவே உள்ள அபராதத் தொகை ஒரு சதுர அடிக்கு 50 பைசா என்ற நிலையே தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை புதிதாக கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதியில் இருந்தும், ஏற்கனவே உள்ள அனுமதி பெறாத மற்றும் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள வணிக கட்டிடங்களுக்கு அடுத்த ஆண்டு (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் ரூ.1 வீதம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.