மின்வாரிய ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசி உத்தரவு ரத்து
சுற்றறிக்கை வலைத்தளங்களில் பரவியதால் மின்வாரிய ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசி உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
மதுரை,
மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் மதுரை மண்டல மின்பகிர்மான முதன்மை பொறியாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அதில், அனைத்து ஊழியர்களும் வருகிற 7-ந் தேதிக்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். உடல் நல பிரச்சினை காரணமாக தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு டிசம்பர் மாதம் சம்பளம் வழங்கப்படாது, என்று கூறப்பட்டு இருந்தது.இந்த சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் இந்த சுற்றறிக்கையை முதன்மை பொறியாளர் ரத்து செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.