சம்பா நெற்பயிர்களை தாக்கும் இலைக்கருகல் நோய்

மழைநீர் வடிந்த நிலங்களில் சம்பா நெற்பயிர்களை தாக்கும் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து வேளாண்மை அதிகாரி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பவதாது:-

Update: 2021-12-02 19:06 GMT
கடலூர், 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சம்பா நெற்பயிர் சாகுபடி வயலில் தண்ணீர் தேங்கி வடிய தொடங்கி உள்ளது. தற்போது மழை குறைந்தாலும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் இளம் பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் எற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக குறிஞ்சிப்பாடி வட்டாரம் கல்குணம், பூதம்பாடி, கருங்குழி பகுதிகளில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் மற்றும் இலை சுருட்டு புழு அறிகுறி தென்பட ஆரம்பித்துள்ளது.
பாக்டீரியா இலைக்கருகல் நோய் காரணியான பாக்டீரியா நெற்பயிரில் வாடல் அல்லது இலைக் கருகலை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் நட்ட 3-4 வது வாரங்களில் தோன்றுகிறது. இலைக்கருகல் ஏற்படுவது இந்நோயின் முக்கியமான அறிகுறியாகும். இலைக்கருகல் அறிகுறியின் ஆரம்ப நிலையில் லேசான பச்சை நிறத்தில் நீர்க்கசிவுள்ள அல்லது மஞ்சள் நிறப்புள்ளிகள் இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றுகிறது.

கருகிய திட்டுகள்

இதனால் இலை நுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகின்றது. நோய் தீவிரமாகும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை இலை பரப்பில் உண்டாக்குகிறது. இவற்றுக்கு அருகில் உள்ள இலையின் பச்சை நிறப்பகுதி கிழிந்து காணப்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகளில் வெண்மையான கூழ் போன்ற திவலைகள், இலையின் ஓரங்களில் காணப்படும். காய்ந்த பின்னர் விரல்களால் தடவிப் பார்க்கும்போது இவை கரடுமுடரான பகுதிகளாகப் புலப்படும்.
நோய் முற்றிய நிலையில் அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு, பயிர் முதிர்வதற்கு முன்பே காய்ந்துவிடும். பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி, சோதனை குழாயிலுள்ள தெளிவான நீரில் போட்டு பார்க்கும்போது இலையின் சாற்றுக் குழாயில் இருந்து வெண்மை நிறத் திரவமாக பாக்டீரியா வெளிவருவதைக் காணலாம்.

வேரின் மூலம் தாக்குகின்றன

இது பாசன நீர், மழை மற்றும் காற்று மூலம் பரவுகிறது. பறித்த நாற்றின் சேதமடைந்த வேரின் மூலமாக பாக்டீரியாக்கள் நெற்பயிரின் உட்புகுந்து பயிரைத் தாக்குகின்றன. பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை யூரியா மூலம் 3, 4 முறையாகப் பிரித்து மேலுரமாக இடலாம். யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மறுநாள் மேலுரமாக இடவேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு ஒரு லிட்டருக்கு 50 மி.லி. அல்லது வேப்ப எண்ணெய் கரைசல் ஒரு லிட்டருக்கு 30 மி.லி. அல்லது வேப்பம் பிண்ணாக்குச் சாறு ஒரு லிட்டருக்கு 100 மி.லி., அல்லது வேலி கருவேல் இலைப்பொடி சாறு ஒரு லிட்டருக்கு 100 மி.லி., சாணக்கரைசல் ஒரு லிட்டருக்கு 200 மி.லி. என இவைகளில் ஏதேனும் ஒன்றை நோய் தோன்றும் தருணத்திலும், மீண்டும் 10 நாட்கள் இடைவெளியிலும் தெளித்து நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். நோயின் தாக்குதல் அதிகரித்தால் ஹெக்டேருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1250 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலை சுருட்டுப்புழு

இலை சுருட்டுப்புழு தாக்குதலின் அறிகுறி என்பது இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். இதை கட்டுப்படுத்த தேவைக்கு அதிகமாக தொழு உரங்கள் இடுவதை தவிர்க்கவும். வரப்புகளை சீராக்கி, அதனை சுத்தமாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்க வேண்டும். வேப்பங்கொட்டை சாறு ஒரு லிட்டருக்கு 50 மி.லி. அல்லது வேப்ப எண்ணெய் ஒரு லிட்டருக்கு 30 மி.லி. ஆகியவற்றை தெளிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்