நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த முதலை
கடலூர் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த முதலையால் கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
கடலூர்,
கடலூர் அருகே உள்ளது வெள்ளக்கரை கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வெள்ளக்கரை பகுதியை சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி அளவில் வெள்ளக்கரையில் உள்ள சாலையோரம் முதலை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்து முதலையை பார்த்தனர். அப்போது அந்த முதலை கிராம மக்களை நோக்கி பாய்ந்தது. இதனால் கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என தெரிகிறது.
வக்காரமாரி நீர்த்தேக்கம்
இதனால் கிராம மக்கள், பாம்பு பிடி வீரர் செல்லா உதவியுடன் கிராமத்திற்குள் புகுந்த முதலை மீது வலையை வீசினர். பின்னர் அந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட முதலை சுமார் 8 அடி நீளமுடையதும், 200 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. இதையடுத்து அவர்கள் பிடிபட்ட முதலையை, கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகள் நேற்று காலை 10 மணி அளவில், அந்த முதலையை சிதம்பரம் அருகே வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் கொண்டு சென்று விட்டனர்.
ஆனால் அந்த முதலை வெள்ளக்கரை கிராமத்திற்குள் எப்படி வந்தது என்பது பற்றி தெரியவில்லை. காரணம், வெள்ளக்கரை சுற்று வட்டார பகுதியில் ஆறு, ஏரி ஏதும் இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வெள்ளக்கரை பகுதியை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வெகு தொலையில் உள்ள பரவனாறு அல்லது கெடிலம் ஆற்றில் இருந்து விளை நிலங்கள் வழியாக ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.