வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 65 லட்சம் சொத்து சேர்த்த பொதுப்பணித்துறை பெண் அதிகாரி, கணவர் மீது வழக்கு
வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 65 லட்சம் சொத்து சேர்த்த வேலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், அவருடைய கணவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர்
வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 65 லட்சம் சொத்து சேர்த்த வேலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், அவருடைய கணவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுப்பணித்துறை பெண் அதிகாரி
வேலூர் மண்டல பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (தொழில்நுட்பகல்வி) அலுவலகம் வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ளது. இதன் செயற்பொறியாளராக ஷோபனா (வயது 57) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 2-ந் தேதி ஷோபனாவின் காரை சோதனை செய்தனர்.
அதில் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தங்கியிருந்த குடியிருப்பு மற்றும் அவரின் சொந்த ஊரான ஓசூரில் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 27 லட்சம் மற்றும் நகை, வெள்ளிப்பொருட்கள், வங்கிக்கணக்குகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் கடந்த 30-ந் தேதி ஓசூரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து ஷோபனாவை கைது செய்தனர். பின்னர் அவரை வேலூர் அழைத்து வந்து மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
ரூ.2½ கோடி சொத்து சேர்ப்பு
லஞ்ச ஒழிப்பு போலீசார் ஷோபனா மற்றும் அவருடைய கணவர் நந்தகுமாரின் பெயரிலான வங்கிக்கணக்குகள், வரவு-செலவுகள், அசையும், அசையா சொத்துகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர். அதில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் கடந்த மாதம் 15-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஷோபனா மற்றும் கணவர் நந்தகுமார் ஆகியோரின் வருமானம் ரூ.42 லட்சத்து 60 ஆயிரத்து 828 ஆகும். ஆனால் அவர்கள் இருவரும் வருமானத்தை விட ரூ.2 கோடியே 65 லட்சத்து 96 ஆயிரத்து 470 அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்தது. இது இருவரின் வருமானத்தை காட்டிலும் 430 சதவீதம் அதிகமாகும்.
அதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஷோபனா, நந்தகுமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது’ என்று போலீசார் தெரிவித்தனர்.