இரண்டு மடங்கு பணம் தருவதாக வரவழைத்து‘கியூ’ பிரிவு போலீஸ் எனக்கூறி ரூ.3 லட்சம் பறிப்பு
அரக்கோணம் அருகே பணம் கொடுத்தால் அதற்கு இரண்டு மடங்கு பணம் தருவதாக வரவழைத்து, கியூ பிரிவு போலீசார் எனக்கூறி ரூ.3 லட்சத்தை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே பணம் கொடுத்தால் அதற்கு இரண்டு மடங்கு பணம் தருவதாக வரவழைத்து, கியூ பிரிவு போலீசார் எனக்கூறி ரூ.3 லட்சத்தை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இரண்டு மடங்கு பணம் தருவதாக...
வேலூர் மாவட்டம் பொன்னையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (50). இவர்கள் தங்களுக்கு தெரிந்த தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசத்தை சேர்ந்த தினேஷ் குமாரை (34) தொடர்பு கொண்டு தங்களிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் நிறைய இருப்பதாகவும், அதை மாற்ற முடியவில்லை என்றும் கூறி உள்ளனர்.
மேலும் பணம் கொடுத்தால் அதற்கு இரண்டு மடங்கு பணம் தருவதாகவும் தினேஷ்குமாரிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். இதை நம்பிய தினேஷ்குமாரை திருத்தணிக்கு வருமாறு கூறி உள்ளனர். அதன்படி தினேஷ்குமார் திருத்தணிக்கு வந்து நடராஜனை தொடர்பு கொண்டு திருத்தணி வந்துள்ளதை தெரிவித்துள்ளார்.
‘கியூ’ பிரிவு போலீசார்
அதற்கு தான் மீட்டிங்கில் இருப்பதாகவும், தினேஷ் இருக்கும் இடத்திற்கு கார் அனுப்புவதாகவும், மதிய உணவு சாப்பிட்டு விட்டு காரில் வந்து காத்திருக்குமாறும் கூறி உள்ளார். அதன்படி அங்கு வந்த காரில் தினேஷ்குமார், அவரது மாமா ஆனந்த் மற்றும் காரில் ஏற்கனவே இருந்த 3 பேர் என 5 பேரும் அரக்கோணம் நோக்கி வந்துள்ளனர்.
கார் அரக்கோணம்- சோளிங்கர் சாலையில் உள்ள மேல்பாக்கம் ரெயில்வே சந்திப்பு அருகே வந்தபோது அவர்களுக்கு முன்னால் சென்ற காரில் இருந்து 4 பேர் இறங்கி தினேஷ் குமார் வந்த காரை மடக்கி தாங்கள் கியூ பிரிவு போலீசார் என கூறி, அனைவரையும் கீழே இறக்கி தினேஷ்குமார், அவருடைய மாமா ஆனந்த் ஆகிய இருவரை தவிர மற்ற 3 பேரை தாங்கள் வந்த காரில் அனுப்பி விட்டனர்.
ரூ.3 லட்சம் பறிப்பு
பின்னர் தினேஷ் குமாரிடம் இருந்த ரூ.3 லட்சத்தை பறித்துக் கொண்டு, சம்பந்தமாக யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி தினேஷ்குமார், ஆனந்த் ஆகிய இருவரையும் அவர்கள் வந்த காரிலேயே அழைத்துச்சென்று அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் விட்டு சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மார்ட்டின், பாலசுப்பிரமணி, தீனதயாளன் மற்றும் ஹேம்நாத் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கில் நடராஜன், பாபு, ரஜினி, இருட்டு சந்திரன், ரூபன், குட்டி மற்றும் சில நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.