தூய்மைப்பணியாளர் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்

தமிழக அரசு தூய்மைப்பணியாளர் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.;

Update: 2021-12-02 17:23 GMT
திருப்பூர்
தமிழக அரசு தூய்மைப்பணியாளர் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, பனியன் தொழில்துறையினர், தூய்மை பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், பாதுகாப்பு உபகரணங்கள் சரிவர வழங்கப்படவில்லை. இ.எஸ்.ஐ., பி.எப். பிடிப்பதில் குளறுபடி உள்ளது. இன்சூரன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கண்காணிப்பு கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என்று ஆணைய தலைவர் அறிவுறுத்தினார். தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் பிரதம மந்திரியின் இன்சூரன்சு திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.
குழு அமைப்பு
பின்னர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். குறைவான சம்பளம் வழங்குவதாகவும், வங்கிக்கணக்கில் வழங்காமல் கையில் பணம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்கள். வங்கி கணக்கில் சம்பளம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைவான சம்பளம் வழங்குவது தெரியவந்தால் ஆய்வு செய்து எத்தனை மாதம் குறைவான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதோ, அதையும் சேர்த்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொடுக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களின் குறைகளை விசாரிக்கும் வகையில் ஒரு குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒப்பந்ததாரர்கள் தவறு செய்திருந்தால் அவர்களின் பெயரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
ஒப்பந்த முறை இருப்பதால்தான் தூய்மைப்பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சம்பளம் குறைவு, பி.எப்., இ.எஸ்.ஐ. பிடித்தம் இல்லாதது, சம்பளத்தை வங்கிக்கணக்கில் செலுத்தாமல் உள்ளது, மோசமாக நடத்துவது ஆகிய புகார்கள் வந்துள்ளது. ஆனால் நிரந்தர பணியாளர்களுக்கு இவ்வாறான புகார்கள் இல்லை. எனவே தூய்மைப்பணியாளர்களுக்கான ஒப்பந்த முறையை தமிழக அரசு உடனடியாக ஒழிக்க வேண்டும்.
ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்
ஒப்பந்ததாரர்களுக்கான பணத்தை அரசு வழங்குகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படுகிறது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம், பி.எப்.பிடித்தம் ஆகியவற்றை நேரடியாக அரசாங்கமே செய்து விடலாம். லாபகரமான தொழிலாக தூய்மைப்பணி உள்ளது. நஷ்டத்தில் சென்றால் ஒப்பந்ததாரர்கள் இந்த தொழிலை எடுக்க மாட்டார்கள். லாபத்தில் இயங்கும் இந்த துறையை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. ஒப்பந்ததாரருக்கு கிடைக்கும் லாபம் அரசுக்கோ, தூய்மை பணியாளர்களுக்கு செல்ல வேண்டும். மாநில அரசு இதில் உடனடியாக தலையிட்டு தூய்மை பணியாளர்களுக்கான ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பாதிப்புகளை ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் பாதிப்பு அரசுக்கு தெரியும். அந்த அளவுக்கு தூய்மைப்பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையம் தேசிய அளவில் உள்ளது. அதுபோல் மாநில அளவில் தூய்மைப்பணியாளர்களுக்கு ஆணையம் அமைக்க வேண்டும். தற்போது மாநில அளவில் நலவாரியம் மட்டுமே உள்ளது. நலவாரியத்தை விட ஆணையம் முழு அதிகாரத்துடன் செயல்பட முடியும். கர்நாடகாவில் இந்த ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வடமாநில தொழிலாளர்கள்
தேசிய அளவில் தூய்மைப்பணியாளர்களுக்கு நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் உள்ளது. அதுபோல் மாநில அளவில் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். தூய்மைப்பணியாளர்களின் திட்டங்களை அவர்களுக்கு தெரியப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காங்கேயத்தில் நகராட்சி ஆணையாளராக இருந்தவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. விசாகா கமிட்டி விசாரித்து வருகிறது. இது உறுதி செய்யப்பட்டால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து தூய்மைப்பணிக்கு அமர்த்தும்போது சம்பள பிடித்தம் செய்வதாக புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றி விசாரித்து உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்