நூல் விலை உயர்வை கண்டித்து நெசவாளர்கள் வேலைநிறுத்தம்

ஆண்டிப்பட்டி அருகே நூல் விலை உயர்வை கண்டித்து நெசவாளர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-02 17:17 GMT
ஆண்டிப்பட்டி: 


வேட்டி-சேலை உற்பத்தி
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட தறிக்கூடங்களும் உள்ளன. அதில் உயர்தர காட்டன் சேலைகள் மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 
அதுதவிர அரசு வழங்கும் இலவச வேட்டி-சேலைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நெசவாளர்கள் தறிக்கூடங்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் அவரவர் வீடுகளிலும் சேலை மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். 

நூல் விலை உயர்வு
கடந்த சில மாதங்களாக வேட்டி-சேலைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் நெசவாளர்கள் லாபம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 
இதற்கிடையே மத்திய அரசு, நூல் விலையை குறைக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

வேலைநிறுத்தம் 
இந்தநிலையில் சக்கம்பட்டி பகுதி நெசவாளர்கள் நூல் விலை உயர்வை கண்டித்து நேற்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட தறிக்கூடங்கள் மூடப்பட்டன. 
இதனைத்தொடர்ந்து நேற்று மாலை ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் மத்திய அரசு நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தறிக்கூட உரிமையாளர்கள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அப்பகுதி நெசவாளர்களிடம் கேட்டபோது, நூல் விலை உயர்வால் சேலை, வேட்டிகள் உற்பத்தி செய்வது சிரமமாக உள்ளது. மேலும் மத்திய அரசு நூல் விலைய கட்டுப்படுத்த வேண்டும். நூல் மற்றும் ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் நூல் வழங்க வேண்டும். தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம் என்றனர். 

மேலும் செய்திகள்