உபரிநீரை திறக்க வேண்டிய அவசியம் இருக்காது
திருமூர்த்தி அணை கோடைகாலத்தில் தூர்வாரப்பட்டு இருந்தால் உபரிநீரை திறக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
தளி
திருமூர்த்தி அணை கோடைகாலத்தில் தூர்வாரப்பட்டு இருந்தால் உபரிநீரை திறக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
திருமூர்த்தி அணை உபரிநீர் திறப்பு
உடுமலையை அடுத்த திருமூர்த்திஅணையை ஆதாரமாகக்கொண்டு பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வலையபாளையம் வாய்க்கால் மூலமாகவும் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. அணையை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஆதாரமாகக் கொண்ட பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் மற்றும் திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருமூர்த்திஅணை அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. இதையடுத்து அணையின் பாதுகாப்புகருதி நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் பாலாற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
முழுமையாக தூர்வார வேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழைப்பொழிவு ஏற்பட்டு அணை நிரம்பியது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அணை முழுமையாக தூர்வாரப்படாத காரணத்தால் அதில் சுமார் 20 சதவீதம் மண் தேங்கி உள்ளது. இதனால் நீர்தேக்க பரப்பளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. அணையை தூர்வாரக்கோரி விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பருவ மழை குறுக்கிட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அணையின் கிழக்குப்பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கோடைகாலத்தில் முழுமையாக தூர்வாரி அப்புறப்படுத்தினால் கூடுதலாக தண்ணீரை சேமிக்க இயலும். அத்துடன் உபரிநீரை திறக்க வேண்டிய அவசியமும் இருக்காது. எனவே இனிவரும் காலங்களில் அணையை முழுமையாக தூர்வாரி நீர்தேக்க பரப்பளவை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பாதுகாப்பு பணி
அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து குறைந்துவிட்ட காரணத்தினால் நேற்று மதியம் 2 மணியளவில் பாலாற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் அடைக்கப்பட்டது. அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை உதவி பொருளாளர் மாரிமுத்து தலைமையிலான பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணைப் பகுதியில் நேற்றும் பொதுமக்கள் திரண்டதால் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.