போலி காசோலை மூலம் மில் அதிபரிடம் ரூ 10 லட்சம் மோசடி

போலி காசோலை மூலம் மில் அதிபரிடம் ரூ 10 லட்சம் மோசடி

Update: 2021-12-02 16:47 GMT
கோவை

போலி காசோலை மூலம் மில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மில் அதிபர்

கோவை மாவட்டம் காரமடையில் ஸ்பின்னிங் மில் நடத்தி வருபவர் கல்யாணசுந்தரம் (வயது 55). இவர் கோவை கணபதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்து உள்ளார். இவரது நிறுவனத்தில் பண வரவு செலவுகள் அனைத்தும் ஆன்லைன் மற்றும் காசோலை மூலம் நடத்தப்படுவது வழக்கம்.

மேலும் அதிக அளவிலான தொகை குறித்த வரவு செலவுகள் வங்கி மூலம் மில் அலுவலக செல்போன் எண்ணுக்கு அழைத்து உறுதி செய்து கொள்வார்கள். 

ரூ.10 லட்சம் மோசடி 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்யாண சுந்தரத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் டெல்லியில் உள்ள சுரேஷ்குமார் மேத்தா என்பவரின் வங்கிக்கு மாற்றப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சம்மந்தப்பட்ட வங்கி கிளை மேலாளரிடம் இது குறித்து கேட்டார்.

அப்போது வங்கி மேலாளர் தங்களது நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டதாக உள்ள காசோலை மூலம் பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். அந்த காசோலையை சோதனை செய்து பார்த்த போது அது போலியாக தயாரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

போலீசார் விசாரணை 

இந்த மோசடி குறித்து கல்யாணசுந்தரம் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போலி காசோலை தயாரித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த சுரேஷ்குமார் மேத்தா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்