கள்ளக்குறிச்சியில் டெங்கு தடுப்பு பணி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

கள்ளக்குறிச்சி நகரில் நடைபெற்ற டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-12-02 16:36 GMT
கள்ளக்குறிச்சி, 

கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளது. குறிப்பாக சில குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி நகரில் உள்ள  368 தெருக்களிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மழைக்காலங்களில் கொசுப்புழுக்கள் அதிகம் உற்பத்தி ஆவதால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் சூழல் உள்ளதால் மழைநீர் தேங்கக்கூடிய தேங்காய் சிரட்டை, டயர், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டு உரல் போன்ற தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களை குடியிருப்பு பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
சுகாதாரமான குடிநீர் வினியோகம்

இதுதவிர கழிவுநீர் வாய்க்கால்களில் நீர் தேங்காமல் இருக்க வாய்க்கால்களில் உள்ள அடைப்புகள் சீர் செய்யப்பட்டு வருகிறது. டெங்கு போன்ற நோய்கள் பரவ காரணமான கொசுப்புழுக்களை அழிக்க ஏதுவாக 5 புகை மருந்து எந்திரம் மற்றும் வாகனம் மூலம் இயக்கக்கூடிய ராட்சத புகைமருந்து எந்திரத்தின் மூலம் சுழற்சி முறையில் கள்ளக்குறிச்சி நகராட்சி முழுவதும் புகைமருந்து அடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் கேசவலு நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள உயர்மட்ட குடிநீர் தொட்டியில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சரியான விகிதத்தில் குளோரினேஷன் செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்கவும், குடிநீர் இணைப்பு உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் சரி செய்யவும் நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் குமரன், நகராட்சி பொறியாளர் பாரதி மற்றும் நகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.

மேலும் செய்திகள்