பழனி நகராட்சி பள்ளி மாணவனுக்கு பாராட்டு
தேசிய பேட்மிண்டன் போட்டியில் சாதனை படைத்த பழனி நகராட்சி பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.
பழனி
தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான பேட்மிண்டன் போட்டி கோவாவில் கடந்த மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். 10, 12, 14, 17, 19 ஆகிய வயதுகளின் அடிப்படையில் தனித்தனியாக போட்டிகள் நடந்தன.
இதில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவன் மகேஷ்வரன் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். இதனையடுத்து அந்த மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு மாநில தொழிற்கல்வி இணை இயக்குனர் ஜெயக்குமார் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவன் மகேஷ்வரனுக்கு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி, மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.