வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூரில் நடந்து சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் நடந்து சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
பணம் பறிப்பு
திருப்பூர் மாநகரம் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட லட்சுமி தியேட்டர் அருகே கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி நடந்து சென்ற நபர்களிடம் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கோவை மாவட்டம் பொள்ளாச்சி சித்தூரை சேர்ந்த நரேந்திரன் (வயது 23) என்பவரை 15 வேலம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நரேந்திரன் மீது ஏற்கனவே 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு செல்போன் பறிப்பு வழக்கும், ஒரு கொலைமிரட்டல் வழக்கும் உள்ளது.
53 பேர்
நரேந்திரன் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நரேந்திரனை ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 53 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.