பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
பூண்டி ஏரியில் இருந்து உபரி தண்ணீர் திறப்பு வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீராக குறைக்கப்பட்டது.;
பூண்டி ஏரி
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது. மேலும், பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மபள்ளி அணையில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பை அதிகரித்தும், குறைத்தும் நடவடிக்கைகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
நீர்வரத்து குறைந்தது
இதற்கிடையே நேற்று முன்தினம் வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி உபரி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. தற்போது மழை நின்று விட்டதால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக நேற்று வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக திறந்துவிடப்படுகிறது. 3 நாட்களுக்கு முன் அதிகபட்சமாக 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.