வேலூர் கன்சால்பேட்டையில் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர் கன்சால்பேட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் கன்சால்பேட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியிருப்புகளை சுற்றி மழைநீர்
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பல நாட்கள் பலத்த மழை பெய்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வீடுகளை மழைநீர் சூழ்ந்து நின்றது. குறிப்பாக வேலூர் கன்சால்பேட்டை, இந்திராநகர், திடீர்நகர், முள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அதன்காரணமாக அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வேலூரில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யவில்லை. ஆனாலும் கன்சால்பேட்டை பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வெளியேறாமல் அங்கேயே தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர். வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். மழைநீரை அப்புறப்படுத்தும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பொதுமக்கள் சாலை மறியல்
அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். மேலும் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு கமிஷனர், குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் அகற்றவும், தொடர்ந்து அங்கு மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கமிஷனர் அசோக்குமார் கன்சால்பேட்டை குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.