திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு
திருப்பத்தூர் மாவட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அவர்கள் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராபி பருவப் பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டு காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
ராபி பருவத்தில் சாகுபடி செய்த ராகி, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் 17-ந்தேதியும், நெல், கம்பு பயிருக்கு 31-ந் தேதியும் கரும்புக்கு 31-ந் தேதியும் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யலாம்
எனவே, விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அணுகி காப்பீடு கட்டணத்தை செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலி அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தை தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இத்திட்டம் தொடர்பாக விவரங்கள் அறிந்திட அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.