போலீஸ்காரரின் வங்கிக்கணக்கில் கடன்பெற்று ரூ.50 ஆயிரம் அபேஸ்
போலீஸ்காரரின் வங்கிக்கணக்கில் கடன்பெற்று ரூ.50 ஆயிரம் அபேஸ்
வேலூர்
வேலூரில் ஆன்லைன் மூலம் போலீஸ்காரரின் வங்கிக்கணக்கில் ரூ.80 ஆயிரம் கடன்பெற்று ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பயன்படுத்தாத வங்கிக்கணக்கு
வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பிரபு (வயது 33). இவர் 2 வங்கிக்கணக்குகள் வைத்துள்ளார். அவற்றில் ஒரு வங்கிக்கணக்கில் நீண்ட நாட்களாக எவ்வித பணபரிவர்த்தனையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி பிரபுவின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில், உங்கள் வங்கிக்கணக்கு நீண்ட நாட்களாக பணபரிவர்த்தனை இல்லாமல் உள்ளது. எனவே வங்கிக்கணக்கு முடங்க வாய்ப்புள்ளது. உங்களின் விவரங்களை தெரிவித்து வங்கிக்கணக்கை புதுப்பித்து கொள்ளும்படி கூறப்பட்டிருந்தது.
அதையடுத்து பிரபு அந்த குறுந்தகவலில் இருந்த இணைப்பில் தனது சுயவிவரங்களை பதிவு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து அவருடைய செல்போன் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் பதிவு செய்தார். சிறிதுநேரத்தில் அவருடைய வங்கிக்கணக்கிற்கு ரூ.80 ஆயிரம் வந்துள்ளது. அதையடுத்து சில நிமிடங்களில் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் வேறு ஒரு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
ரூ.50 ஆயிரம் அபேஸ்
அதனால் சந்தேகம் அடைந்த பிரபு இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது தான் அவருடைய வங்கிக்கணக்கில் ஆன்லைனில் ரூ.80 ஆயிரம் கடன் (லோன்) பெற்றதும், அதில் இருந்து ரூ.50 ஆயிரம் வேறோரு எண்ணிற்கு சென்றதும் பிரபுக்கு தெரிய வந்தது. வங்கி அதிகாரிகள் மாதந்தோறும் கடன்தொகையை செலுத்தும்படி பிரபுவிடம் கூறினார்கள். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், பொதுமக்கள் தேவையில்லாத வங்கிக்கணக்குகள் வைத்திருந்தால் அதனை ரத்து செய்வது நல்லது. ஆன்லைன் மற்றும் செல்போனில் எவ்வித தகவல்களையும் பொதுமக்கள் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். தகவல் தெரிவித்த சில நிமிடங்களில் கூட மர்மநபர்கள் உங்கள் பெயரில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.