ஏமாற்றி எழுதி வாங்கி கொண்ட தனது சொத்தை மீட்டு தர வேண்டும்
ஏமாற்றி எழுதி வாங்கி கொண்ட தனது சொத்தை மீட்டு தர வேண்டும் கலெக்டரிடம் மூதாட்டி மனு கொடுத்தார்.
திருவண்ணாமலை
ஏமாற்றி எழுதி வாங்கி கொண்ட தனது சொத்தை மீட்டு தர வேண்டும் கலெக்டரிடம் மூதாட்டி மனு கொடுத்தார்.
திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவரின் மனைவி சிந்தாமணி (வயது 85).
இவர் இன்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் பஞ்சாட்சரம் 1994-ம் ஆண்டு இறந்து விட்டார். எனக்கு சொந்தமாக சமுத்திரம் கிராமத்தில் 1152 சதுரடி காலிமனை மற்றும் அதில் 10-க்கு 10 அளவில் ஓட்டு வீடு உள்ளது.
எனது கணவரின் உறவினர் மகள் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். இதைப் பயன்படுத்தி அவர் எனக்கு தெரியாமல் வாரிசு சான்றிதழில் அவரின் பெயரை சேர்த்துக் கொண்டார்.
2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி லோன் வாங்கி தருகிறேன் எனக்கூறி என்னை அழைத்துச் சென்று எனது சொத்தை தானசெட்டில்மெண்டாக அவரின் மகன் பெயருக்கு எழுதி வாங்கி கொண்டார். இதுவும், எனக்கு தெரியாமலேயே நடந்து விட்டது.
இந்த நிலையில் அவர், கணவர் மற்றும் மகனுடன் வந்து இது எங்களுடைய இடம் காலி செய்து விட்டு ஓடி விடு, இல்லையென்றால், கொலை செய்து விடுவோம் என மிரட்டி அங்கிருந்து என்னை வெளியேற்ற முயற்சி செய்தார்கள்.
எனது இடத்தை அபகரித்துள்ளனர். எனது இடத்தை எழுதி வாங்கிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சொத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.