ஸ்ரீபெரும்புதூரில் போலி வைர நகையை விற்று கட்டிட ஒப்பந்ததாரரிடம் மோசடி
ஸ்ரீபெரும்புதூரில் போலி வைர நகையை விற்று கட்டிட ஒப்பந்ததாரரிடம் மோசடி செய்து தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலி நகை
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருமங்கை ஆழ்வார் தெருவில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 47). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் நேற்று ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது செல்போன் `சுவிட்ச்-ஆப்' ஆகி விட்டது எனக்கூறி கண்ணனுடைய செல்போனை வாங்கி பேசியுள்ளார்.
பின்பு, தான் காஞ்சீபுரத்தில் நகைக்கடை வைத்திருப்பதாகவும், வியாபாரியிடம் நகை வாங்குவதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இப்பகுதிகளில் குறைவான விலைக்கு கடைகளுக்கு தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் விற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகை உள்ளதாகவும், அதை ரூ.3 லட்சத்துக்கு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி ஜொலி ஜொலிக்கும் கற்கள் அடங்கிய போலி நகையை எடுத்து காண்பித்துள்ளார்.
மோசடி
இதைப் பார்த்த கண்ணனுக்கு பேராசை ஏற்படவே தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் 4 மோதிரங்கள் என 9 பவுன் நகையை கழட்டி நகை வியாபாரியிடம் கொடுத்துள்ளார்.
உடனே பேப்பரில் மடித்து வைத்திருந்த போலி நகையை மோசடியாக கண்ணன் கையில் கொடுத்து விட்டு, நகையை இங்கே பிரித்துப் பார்க்க வேண்டாம் என்றும், போலீசுக்குத் தெரிந்தால் பிரச்சினை என்று கூறிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டார்.
கண்ணன் சிறிது தூரம் சென்ற பிறகு பிரித்து பார்த்த போது, அது போலி நகை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கண்ணன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.