ஊரப்பாக்கத்தில் பள்ளம் விழுந்த வீட்டில் தாசில்தார் நேரில் ஆய்வு

ஊரப்பாக்கத்தில் பள்ளம் விழுந்த வீட்டில் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2021-12-02 10:52 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி அதனுடைய உபரிநீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இதேபோல நந்திவரம், ஊரப்பாக்கம் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் வழியாக உள்ள அடையாறு கால்வாயில் செல்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் 2-வது குறுக்கு தெரு பகுதியில் உள்ள குணசேகரன் என்பவர் வீட்டின் நடு ஹாலில் திடீரென தரை 10 அடி ஆழத்திற்கு உள்வாங்கி அதன் வழியாக ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு மழை வெள்ளநீர் ஓடுகிறது.

இந்தநிலையில் தரை உள்வாங்கிய வீட்டில் நேற்று வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து தாசில்தார் கூறுகையில், வீட்டின் பின்புறம் அடையாறு கால்வாய் வழியாக அதிகளவில் மழைநீர் செல்கிறது. கால்வாய் குறுகிய நிலையில் இருப்பதாக இந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது சம்பந்தமாக நில அளவை செய்து கால்வாயை யாராவது ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் அல்லது வீடு கட்டி இருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்