மழைநீர் அகற்றப்படாததை கண்டித்து மவுலிவாக்கத்தில் 2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்
மவுலிவாக்கத்தில் 2-வது நாளாக தண்ணீர் இன்னும் அகற்றப்படாததால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2-வது நாளாக தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மவுலிவாக்கம், பரணிபுத்தூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சியில் மழைநீர் அதிக அளவில் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது.
மேலும் போரூர் ஏரி நிரம்பி உள்ளதால் அந்த தண்ணீரும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் கடந்த 15 தினங்களாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையோரம் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீரை அகற்ற வேண்டும் என நேற்று முன்தினம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தண்ணீர் இன்னும் அகற்றப்படாததால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2-வது நாளாக தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். இதையடுத்து மேம்பாலத்தில் இருந்து கீழே வந்த பொதுமக்கள் மாங்காடு - மவுலிவாக்கம் செல்லும் சாலையிலும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீரை அகற்றாததை கண்டித்து தொடர்ந்து 2-வது நாளாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.