உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை அரசு ஊழியர்கள் எடுத்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரத்தை தொடங்கிவைத்தார். பின்னர், எச்.ஐ.வி.-ஆல் பாதிக்கப்பட்ட 60 நபர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
எச்.ஐ.வி.குறித்த பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் அங்கு நடைபெற்ற சமபந்தி போஜனத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மற்றும் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பழனி, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) ஜீவா, துணை இயக்குனர் (காசநோய் பிரிவு) காளிஸ்வரி, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் ப.கணேசன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.