சென்னை-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலின் நூற்றாண்டு கொண்டாட்டம்
சென்னை ரெயில்வே கோட்டம், சென்னை-மும்பை அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலின் நூற்றாண்டு விழாவை நேற்று கொண்டாடியது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் நூற்றாண்டு விழாவை நேற்று சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘கேக் வெட்டி’ கொண்டாடினர்.
பிரபலமான இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 1921-ம் ஆண்டு மெட்ராஸ்-பாம்பே என்ற பெயரில் முதன்முதலில் பயணிகள் ரெயில் சேவையாக தொடங்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் சேவை, எக்ஸ்பிரஸ் சேவையாக 1930-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் மாற்றப்பட்டு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (சி.எஸ்.எம்.டி.) -சென்னை சென்டிரல் அதிவேக எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22159/60) என்ற பெயரில் இயக்கப்பட்டது.
கடந்த வருடம் ஜூலை 1-ந்தேதி இந்த சேவை அதிவேக ரெயில் சேவைக்கு மாற்றப்பட்டது. இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் மொத்தம் 1,284 கிலோமீட்டர் தூரத்தை கடக்கின்றது. இந்த ரெயில் சென்னை-மும்பை இடையே 31 ரெயில் நிலையங்களை கடந்து செல்கின்றது. இவற்றில் புனே, தாவுண்ட், சோலாப்பூர், யாட்கிர், குண்டக்கல், கடப்பா, ரேனிகுண்டா மற்றும் அரக்கோணம் போன்ற பிரபலமான ரெயில் நிலையங்களும் அடங்கும்.
இந்த ரெயிலின் முழுமையான பயணத்துக்கு சராசரியாக ஒரு நாள் தேவைப்படுகிறது. இந்த ரெயில் சேவை பயனாளர்களுக்கு பலதரப்பட்ட பெட்டிகளையும், இருக்கைகளையும், படுக்கை வசதிகளையும் கொண்டது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் நூற்றாண்டு விழாவை நேற்று சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘கேக் வெட்டி’ கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சச்சின் புனிதா, சுப்பிரமணியன் உள்பட ரெயில்வே அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.