நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தலைக்காட்டிய வெயில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்தது
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்தது
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று வெயில் தலைக்காட்டியது. மேலும், நீர்வரத்து குறைந்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்தது. இதனால் மேலநத்தம், சீவலப்பேரி தரைப்பாலங்களில் போக்குவரத்து தொடங்கியது.
பலத்த மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 25-ந் தேதி முதல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. ஒரு வாரமாக பரவலாக பெய்த இந்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், தாமிரபரணி ஆற்றில் உள்ள சுடலைமாடசாமி, விநாயகர் உள்ளிட்ட கோவில்கள் வெள்ளத்தில் மூழ்கின. குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தரைப்பாலங்கள் மூழ்கின
தொடா்ந்து இந்த மாவட்டங்களில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நேற்று முன்தினம் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வரை வெள்ளம் சென்றது.
இதனால் நெல்லை மேலநத்தம்-கருப்பந்துறை, சீவலப்பேரி தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கியடித்தபடி சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.
நீர் திறப்பு குறைப்பு
இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மழை இல்லை. வெயில் அடித்தது. அணைப்பகுதிகளிலும் மழை இல்லாததால், அங்கிருந்து நீர் திறப்பும் குறைக்கப்பட்டது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 138 அடியாக இருந்தது. 4 ஆயிரத்து 652 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 5 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்ட்டம் 140.91 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 112.80 அடியாகவும் உள்ளது.
போக்குவரத்து தொடங்கியது
இந்த அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றுவது குறைக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தணிந்தது. இருந்தாலும் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை சூழ்ந்தபடி தண்ணீர் செல்கிறது. நீரில் மூழ்கியிருந்த கோவில் வளாகங்கள், நடைபாதைகள் தற்போது வெளியே தெரிகின்றது.
மேலும் மேலநத்தம்-கருப்பந்துறை தரைப்பாலம், சீவலப்பேரி தரைப்பாலங்களில் வெள்ளம் வடிந்தது. இந்த பாலங்களில் நேற்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மேலும் நெல்லை டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்தன. இதனால் அந்த பள்ளிக்கூடத்திற்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டது. இதுதவிர நெல்லை மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு பின்னர் பள்ளிக்கூடங்கள் திறந்ததால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்றனர்.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம்-15, சேர்வலாறு-7, மணிமுத்தாறு-9, கொடுமுடியாறு-10, அம்பை-6, சேரன்மாதேவி-6, ராதாபுரம்- 2, மூைலக்கரைப்பட்டி-10, நாங்குநேரி- 30, களக்காடு-7, நம்பியாறு-10, அம்பை-7, நாங்குநேரி-2, பாளையங்கோட்டை-4, நெல்லை-2, கடனாநதி-36, கருப்பாநதி-27, அடவிநயினார்-3, குண்டாறு-6, ஆய்க்குடி- 21, செங்கோட்டை-5, தென்காசி-16, சங்கரன்கோவில்-5, சிவகிரி-12.