குளிக்க சென்றபோது வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட பெண் சாவு

வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட பெண் சாவு

Update: 2021-12-01 21:41 GMT
நெல்லை:
நெல்லை அருகே குளிக்கச் சென்றபோது வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
வாய்க்காலில் குளிக்க சென்றார்
நெல்லை சீவலப்பேரியை அடுத்த பாலாமடை அருகே உள்ள காட்டாம்புளியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகள் தயா (வயது 37). இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவர் நேற்று அந்தப் பகுதியில் உள்ள வாய்க்காலில் தனியாக குளிக்கச் சென்றார். அப்போது வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராதவிதமாக தயா, வாய்க்காலில் தவறி விழுந்தார்.
பெண் பரிதாப சாவு
இதில் அவரை தண்ணீர் இழுத்துச் சென்றது. உடனே அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தயாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் பாலாமடை பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்