கடன் பிரச்சினையில் விவசாயி படுகொலை; 3 பேர் கைது

சார்மடி மலையில் மூங்கில் தோப்பில், மாயமானதாக தேடப்பட்ட விவசாயியை கொன்று உடலை சாக்கு பையில் கட்டி புதரில் வீசிய நண்பர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், பணத்தகராறில் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.

Update: 2021-12-01 21:02 GMT
சிக்கமகளூரு: சார்மடி மலையில் மூங்கில் தோப்பில், மாயமானதாக தேடப்பட்ட விவசாயியை கொன்று உடலை சாக்கு பையில் கட்டி புதரில் வீசிய நண்பர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், பணத்தகராறில் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது. 

 விவசாயி மாயம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலூரை சேர்ந்தவர் நாகேசப்பா(வயது 46). விவசாயியான, இவர் கடந்த 27-ந்தேதி சார்மடிமலை பகுதியில் உள்ள மூங்கில் தோப்பில் மரம் வெட்ட சென்றார்.

ஆனால் அன்று அவர், வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி ரேணுகா-குடும்பத்தினர் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் நாகேசப்பா கிடைக்கவில்லை. இதையடுத்து 2 நாட்கள் மேலாகியும் கணவர் வீடு திரும்பாததால் ரேணுகா பனகல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

 இதைதொடர்ந்து போலீசார் வனத்துறையினர், சமூக ஆர்வலர் என நூற்றுக்கணக்கானோர் உதவியுடன் சார்மடி மலையில் உள்ள மூங்கில் தோப்பிற்கு சென்று மாயமான நாகேசப்பாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவரை, வனவிலங்குகள் அடித்து கொன்றுவிட்டதா என்று சந்தேகிக்கப்பட்டது. 

 சாக்கு பையில் உடல்...

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை முதல் போலீசார், வனத்துறையினர் நாகேசப்பாவை தொடர்ந்து தேடிவந்தனர். அப்போது அவர், கிடைக்கவில்லை. இதையடுத்து மாலை நேரத்தில் மூங்கில் தோப்பில் உள்ள ஒரு புதரில் ரத்தகறையுடன் சாக்கு பையால் சுற்றி கட்டப்பட்டு ஏதோ கிடந்ததை போலீசார், வனத்துறையினர் பார்த்தனர். இதையடுத்து போலீசார், வனத்துறையினர் சாக்கு பையால் சுற்றிய கட்டை அவிழ்த்து பார்த்தனர்.

 அதில் மாயமானதாக தேடப்பட்ட நாகேசப்பா செத்து பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் பயங்கர ஆயுதங்களால் நாகேசப்பா தாக்கப்பட்டு இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மூங்கில் தோப்பிற்கு வந்த நாகேசப்பாவை, மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களால் அடித்து கொன்று உடலை சாக்கு பையால் சுற்றி கட்டி புதரில் வீசிச் சென்றது ெதரியவந்தது.  இதையடுத்து நாகேசப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பனகல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 3 பேர் கைது

இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் நாகேசப்பாவின் நெருங்கிய நண்பரான கிருஷ்ணே கவுடாவிடம்(வயது 45) கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அதில் நாகேசப்பா, கிருஷ்ணே கவுடாவுக்கு ரூ.5 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் திரும்பி தராததால் நாகேசப்பா பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளார். 

இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணேகவுடா, தனது கூட்டாளிகளான உதய், பிரதீப் ஆகிய பேருடன் சேர்ந்து, மூங்கில் தோப்பில் இருந்த நாகேசப்பாவை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிட்டு உடலை சாக்குப்பையில் கட்டி புதரில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்