அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்கள் பதிவு செய்து கொள்ளலாம் கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.;
சேலம்,
நலத்திட்ட உதவிகள்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
சேலம் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்து உதவித் தொகை கோரி விண்ணப்பித்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக 320 தொழிலாளர்களுக்கு ரூ.3.20 லட்சமும், கல்வி உதவித் தொகையாக 1,152 தொழிலாளர்களுக்கு ரூ.26.59 லட்சமும், கண்கண்ணாடி உதவித் தொகையாக 28 தொழிலாளர்களுக்கு ரூ.14 ஆயிரமும் என மொத்தம் 1,500 தொழிலாளர்களுக்கு ரூ.29 லட்சத்து 93 ஆயிரத்து 450 உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி தற்போது முதல்கட்டமாக 10 தொழிலாளர்களுக்கு ரூ.38 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகைகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
நல வாரியங்கள்
உடல் உழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 1999-ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 1.9.2006 முதல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 17 நல வாரியங்கள் செயல்பாட்டில் உள்ளன.
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பெறுப்பேற்ற 50 நாட்களில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்ற இலக்கின் அடிப்படையில் ரூ.10 கோடியே 69 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள் முதற்கட்டமாக கடந்த 30.7.2021 அன்று வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்ற விழாவில் 50,721 தொழிலாளர்களுக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
பதிவு செய்து கொள்ளலாம்
எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவரும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று தங்களை எளிதாக நல வாரியங்களின் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக பெற தொழிலாளர்கள் அனைவரும் தங்களை நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தொழிலாளர்களுக்கு உள்ள இடர்பாடுகளை உடனடியாக சரிசெய்தவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தயாராக உள்ளது.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முத்து, தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்டங்கள்) மஞ்சள்நாதன் உள்பட தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.