சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பென்னாகரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2021-12-01 20:19 GMT
தர்மபுரி:
பென்னாகரம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் பலாத்காரம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தொன்னகுட்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). தொழிலாளி. இவர் கடந்த 2016- ம் ஆண்டு பள்ளிக்கு சென்று வந்த ஒரு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்று அவர் சிறுமிக்கு மிரட்டல் விடுத்தார்.
அதன்பின் அந்த சிறுமியை மிரட்டி அவர் மீண்டும் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் சிறுமியிடம் கேட்டபோது நடந்த சம்பவம் குறித்து கூறினாள்.
10 ஆண்டு சிறை தண்டனை
இதுகுறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்தது. விசாரணையின் முடிவில் பிரகாஷ் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பக்ரத்துல்லா தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்